Contact:

Farm Location: Thambiranpatty-Village,Keelakanavai-Post,Perambalur-Dist,Pin:621104.
Mobile:9600026269

EMail:sureshgoatfarm@gmail.com

YouTube:http://www.youtube.com/user/SureshDevarajFarm?feature=watch

Kuthirai Masal(Alfalfa) Seeds,Super Napier,C04,Ear Tag,Velimasal Seeds,kalyana murungai seeds Available for Sales

-Thalassery,Boer goat Available For Sales
-Rabbit Available For Sales
- Kadaknath Available For Sales
-Country Chicken Eggs/Chicks Available For Sales
-Goat,Rabbit and Country Chicken Training at our farm
-Hydroponic and Silage Making Training
-Goat Farm Management software for Free
-Sample Record Keeping Excel Sheet Free
-Shed Construction
-Goat Farm CDs and Materials Available for Free(Pls send your email id i will share all my documents)

I'm available all day at the Farm

Monday, 22 July 2013

கொட்டிக் கொடுக்கும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு !

கொட்டிக் கொடுக்கும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு !
பளிச்....பளிச்....
நாட்டு ரக வெள்ளாடுகள்.
நோய் தாக்குவதில்லை.
விரைவான வளர்ச்சி.
தோட்டங்களில் வெள்ளாடு வளர்ப்பவர்களுக்கு, ஆடுகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவதுதான் பெரிய பிரச்னை. 'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு' இதற்கு மாற்றாக இருந்தாலும், அது அவ்வளவாக விவசாயிகளிடம் பிரபலமாகவில்லை. காரணம்... 'கொட்டில் முறையில் வெள்ளாட்டை நன்றாக வளர்க்க முடியாது. மேய்ச்சல் முறைதான் நன்றாக கைகொடுக்கும்' என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் ஆழமாகப் பதிந்திருப்பதுதான்.
ஆனால், இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக, கொட்டில் முறையில் வெள்ளாடுகளைச் சிறப்பாக வளர்த்து வெற்றி கண்டு வருகிறார்... தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகிலுள்ள பி.துரிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்.
ஆடுகள்-இரண்டு, பால் குடிக்கும் குட்டிகள்-ஐந்து... இவற்றை வைத்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆடு வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறார் பன்னீர்செல்வம். இன்று...
54 ஆடுகளாக அவை பெருகி நிற்கின்றன. இவர் வளர்ப்பது வெள்ளாடு வகைகளில் ஒன்றான பல்லையாடு இனத்தைச் சேர்ந்த 'நாய்ப்பல்லை' என்றழைக்கப்படும் நாட்டு ரக ஆடுகள். இவை, தர்மபுரி மாவட்டத்தின் பிரத்யேக ரகங்கள்.
பளீர் கொட்டில்!
பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக அவரது தோட்டத்துக்குச் சென்றபோது நம்மைக் கவர்ந்து இழுத்தது, தரையில் இருந்து ஆறடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டில். அதன் வெளிப்புற உப்பரிகையில் இருந்து கழுத்தை நீட்டிக் கொண்டிருந்த கருப்பும் வெள்ளையுமான ஆட்டுக் குட்டிகள் நம்மைப் பார்த்து வினோத சத்தம் எழுப்பின. மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருப்பது போன்ற சிறுசிறு பலகைகளால் இணைக்கப்பட்ட சரிவான பாதை... அதேபோன்ற பலகைகளால் அமைக்கப்பட்டிருந்த தரைப்பகுதி... அத்தனை ஆடுகள் இருந்தும் படுசுத்தமாக 'பளீர்' என்று காட்சி அளிக்கும் கொட்டில்... என அனைத்துமே நம்மை கவர்வதாக இருந்தன.
ஆடுகளைப் பரிவோடு தடவிக் கொடுத்துக் கொண்டே பேச ஆரம்பித்தார், பன்னீர்செல்வம். ''எனக்கு ஆறு வயசு ஆகுறப்பவே என் தகப்பனார் இறந்துட்டார். அதனால அப்பயே விவசாயம் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். பத்து, பன்னெண்டு வயசுல நானே தனியா விவசாய வேலைகளைப் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.
பஞ்சத்தில் பிறந்த யோசனை!
மழை பெய்யாம போற பஞ்ச காலம்தான் விவசாயிகளுக்குச் சோதனைக் காலம். கஞ்சியையும் கூழையும் குடிச்சுதான் காலம் தள்ளுவோம். அதேமாதிரி ரெண்டு வருஷத்துக்கு முன்ன மழை இல்லாம கிணறெல்லாம் வத்திப் போச்சு. பஞ்சம் பிடிச்சுக்கிட்டு ஆட்ட ஆரம்பிச்சுடுச்சு. அப்பதான் ஆடு வளர்க்கற யோசனை வந்துச்சு. மொத்தமால்லாம் ஆடு வாங்க வசதி கிடையாது. அதனால நாலு ஆட்டுக்குட்டிகளை வாங்கி, அதை வெச்சுப் பெரிய பண்ணை உருவாக்கணும்னு ஆசைப்பட்டேன். 2008-ம் வருசம் டிசம்பர் மாசம் முதல்ல ரெண்டு கையாடு, அஞ்சு பால் குட்டிகளை வாங்கிட்டு வந்தேன். ஒரு லட்சியத்தோடவே கண்ணும் கருத்துமா பராமரிச்சேன். அதோட விளைவுதான்... இன்னிக்கு 54 உருப்படிகளா பட்டி பெருகி நிக்குது.
மளமளவென மருக்கைக் குட்டிகள்!
என் அதிர்ஷ்டமோ... என்னவோ என் ஆடுங்க எல்லாமே நிறைய மருக்கைக் குட்டிகளாத்தான் (பெண்) ஈனுச்சுக. அதனாலதான் இவ்வளவு சீக்கிரமே பெருக்க முடிஞ்சது. இதுவரை ஏழெட்டு கிடாக் குட்டிகளை மட்டும்தான் வித்திருக்கேன். ஒரு மருக்கைக் குட்டியைக்கூட வித்ததில்லை. நூறு ஆடா பெருக்காம ஒரு மருக்கையைக்கூட விக்கக் கூடாதுனு லட்சியமே வெச்சுருக்கேன்'' என்று பன்னீர்செல்வம் சொல்லி நிறுத்த, ஆடு வளர்ப்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார், அவருடைய மகன் மணிவண்ணன். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டே ஆடு வளர்ப்பிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார்.
கைகொடுக்காத வங்கி!
''எங்க பகுதியில மேய்ச்சலுக்குனு தனியா நிலமெல்லாம் இல்லை. இருக்குற கொஞ்சநஞ்ச இடமும் அடிக்கடி மழை இல்லாம காய்ஞ்சு போயுடுது. ஆடுகளுக்காக மூணு ஏக்கர்ல தீவனப்பயிர்களை விதைச்சிருந்தோம். அதை, வளர்ப்பு ஆடுககிட்ட இருந்து காப்பாத்துறது பெரும்பாடா இருந்துச்சு. அதனாலதான் கொட்டில்ல வெச்சு வளக்க முடியுமானு தன்னோட நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டார் எங்கப்பா. அதுக்கப்பறம்தான் ஒரு வழியா கொட்டில் அமைக்க முடிவு பண்ணினார்.
அதுக்காக பேங்க்ல கடன் கேட்டு மாசக் கணக்குல அலையா அலைஞ்சும் கடன் கிடைக்கல. வெறுத்துப் போய், கையில இருந்த பணம், சொந்தக்காரங்ககிட்ட கடன் வாங்குன பணம்னு எல்லாத்தையும் போட்டுதான் போன வருஷம் 2 லட்ச ரூபாய் செலவழிச்சு இந்தக் கொட்டிலை அமைச்சுருக்கார். 32 அடி நீளம், 22 அடி அகலத்துல தரையில இருந்து ஏழடி உயரத்துல அமைச்சுருக்கோம். கொட்டிலோட தரைப்பகுதியில ஆடுகளோட கால் குளம்பு சிக்கிக்காத அளவுக்கு இடைவெளிவிட்டு வரிசையா பலகைகளை இணைச்சுருக்கோம். அதனால ஆட்டோட கழிவுகள் எதுவும் உள்ள தேங்காம கீழ விழுந்துடும்.
மருக்கைகளுக்கு தனி இடம்!
இளங்குட்டிகள், சினையாடுகள், வளருற மருக்கை குட்டிகள்னு ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா தடுப்பு இருக்கு. மருக்கைக் குட்டிகளுக்கு எட்டு மாசம் ஆகுற வரைக்கும் கிடாகிட்ட நெருங்க விடக்கூடாது. அதுக்கு முன்னாடி சினை பிடிச்சுட்டா... குட்டியும் புஷ்டியாப் பிறக்காது. அதிக குட்டிகளையும் ஈனாது. அதுக்காகத்தான் தனித்தனித் தடுப்பு.
ஒரு ஆட்டுக்கு ஒரு நாளைக்கு ஒண்ணேகால் கிலோ பசுந்தீவனம் கொடுக்குறோம். அதை, காலையில... சாயங்காலம்னு பிரிச்சுதான் கொடுப்போம். தீவனப்புல், அகத்திக்கீரை, வேலிமசால், சூபாபுல், சோளத்தட்டுனு நிறைய வகைத் தீவனங்களைக் கலந்துதான் வெள்ளாடுகளுக்குக் கொடுக்கணும். தீவனத்தை மெஷின் வெச்சுப் பொடி பொடியா நறுக்கிக் கொடுத்தா வீணாக்காம அவ்வளவையும் சாப்பிட்டுடும்.
தெம்பு தரும் தானியக் கூழ்!
இதுபோக, கோதுமை, சோளம், கம்பு, ராகி எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு வெச்சிருக்கோம். அதுல ரெண்டு படி மாவை கூழா காய்ச்சி, அதோட அரைகிலோ தவிடு, அரைகிலோ புண்ணாக்கையும் கலந்து ஆடுகளுக்கான தாழியில தண்ணியில கரைச்சு வெச்சுடுவோம். (54 ஆடுகளுக்கும் சேர்த்து) காலையிலயும் சாயங்காலமும் தீவனம் சாப்பிட்ட உடனே இந்தத் தண்ணியைக் குடிக்க வெச்சுடுவோம். வேற எதுவும் தேவையில்லை.
கொட்டிலுக்குக் கீழ, அதாவது ஆடுகளோட புழுக்கை விழுற இடத்துல... தேங்காய் நாரைப் பரப்பி வெச்சுடுவோம். அதுல புழுக்கைகளும், சிறுநீரும் விழுறப்போ நார் நல்லா மக்கிடும். அதை அப்படியே கொண்டு போய் நிலத்துல கொட்டி, தண்ணி பாய்ச்சிடுவோம். தீவனப் பயிர்களை வளர்த்தெடுக்கறதுக்கு இதுதான் உரமே. தனியா இதுக்குனு செலவு பண்றது கிடையாது. தேவைக்குப் போக மீதி இருக்குற புழுக்கைகளை ஒரு டிராக்டர் 2,000 ரூபாய்னு வித்துக்கிட்டிருக்கோம்'' என்று தெளிவாக எடுத்து வைத்தார் மணிவண்ணன்.
ஒரே ஒரு ஆள் போதும்!
மீண்டும் தொடர்ந்த பன்னீர்செல்வம், ''எனக்கு எல்லாமே என் ஆடுகதான். பெரும்பாலும் நான் ஒரு ஆள்தான் மொத்த ஆட்டையும் பராமரிச்சுக்கிட்டு இருக்கேன். கொட்டில்ல வளர்க்கறப்போ நூத்துக்கணக்கான ஆட்டை ஒரே ஆளே பாத்துக்கிடலாம். ஒன்றரை ஏக்கர்ல தீவனம் போட்டாலே நூறு ஆட்டுக்குச் சரியா இருக்கும். எல்லா ஆட்டுக்கும் மூணு மாசத்துக்கு ஒரு தடவை குடல் புழு நீக்குறதுக்கு மருந்து கொடுக்கணும். மத்தபடி வேற நோயெல்லாம் எதுவும் வர்றதில்லை. அதனால மருந்துச் செலவு எதுவும் வர்றதேயில்லை. இந்த ரக ஆடுக கொஞ்சமாத்தான் தீவனம் எடுத்துக்குதுக. அதேசமயம்... ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிக்கு குறையாம போட்டுடுதுக.
அலையாம கொள்ளாம ஒரே இடத்துல இருந்து தீவனம் எடுத்துக்குறதால சீக்கிரமே நல்ல வளர்ச்சி வந்து எடை கூடிடுது. பருவத்துக்கும் தயாராகிடுது. நான் வித்த எட்டு கிடாக்குட்டியையுமே ஆறு மாச வயசுலேயே ஒவ்வொண்ணையும் 2,225 ரூபாய்க்கு வித்தேன். அதனால விற்பனைக்கெல்லாம் கவலைப்பட வேண்டியதேயில்லை. இப்பவே வியாபாரிங்க என் தோட்டத்தைச் சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சுட்டாங்க. அடுத்த வருசத்துல இருந்து, மருக்கைகுட்டிகளோட விற்பனையையும் ஆரம்பிச்சுடுவேன்'' என்றார் மகிழ்ச்சியோடு!

2 comments:

  1. உங்கள் வளர்ப்பு மிகவும் சிறப்பானது ஆடு வளர்க்க கிராமம் சிறந்தது என்று நினைத்தேன் ஆனால் நரத்திலும் வளர்க்கலாம். என தெரிந்துகொன்டேன் மிக்க. நன்றி. வரதராஜன். காஞ்சிபுரம்

    ReplyDelete
  2. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238

    ReplyDelete